Friday, January 21, 2011

காதல் - 45


1
ஆண்டாளின் துயரத்தையும்
மீராவின் துயரத்தையும்
ஒட்டுமொத்தமாய்
சுமத்தி செல்கிறாய்
என் மீது
பிடிவாதமாக...

2
உன்னிலிருந்து
உதிர்ந்த
அந்த ஒற்றை வார்த்தையை
குளிர்பதனப்பெட்டியில்
பதப்படுத்தி வைத்திருக்கிறேன்..
பின்னாட்களில்
அவசியம்
பயன்படுத்தக் கூடுமென..

3
-முன்னர்
எவ்வளவு நெருங்கியிருந்தோமோ
அவ்வளவு விலகியுமிருக்கிறோம்

இன்று
எவ்வளவு ஒதுங்கியிருக்கிறோமோ
நாளை
அவ்வளவு ஒன்றியிருப்போம்

4
உன் நேசம்
என் இதயத்தில் உறைந்தும்
உன் பிடிவாதம்
என் இதயச் சுவர்களில்
கொழுப்பாகப் படிந்தும் விட்டது
இனி என்ன?

5
சந்தித்தலின் மகிழ்வையும்
விடைபெறுதலின் நிமித்தத்தையும்
வெளிப்படுத்துகிறது கைகுலுக்கல்..

உன்னை சந்திக்கும் போது
அது முதலாவது சந்திப்பு
எனத் தோன்றாததாலும்
உன்னைப் பிரியும்போது
அது கடைசி சந்திப்பு
என எண்ணாததாலும்
இதுவரை நிகழ்ந்ததில்லை
நமக்கிடையே கைகுலுக்கல்...

6
வெகுதூரம் போய்விட
எத்தனிக்கும்
உன் எல்லா முயற்சிகளுக்கும்
பின்னால் ஒளிந்திருப்பது
மென்மையான காதலும்
முன்னீடுடைய சமன்பாடுகளும்

7
உன்னை நன்கறிவேன்
உன் வார்த்தைகளில் பொய் விதைத்த போதும்
உன் மௌனத்தால் மறுதலித்த போதும்
நன்கறிவேன்
அதன் பின்னிருந்து
துடித்துக் கொண்டிருக்கும்
என் மீதான அக்கறையை
கையளிக்காத காதலை...

8
இந்த உடலைக்
கடந்துவிட்டால்
விடுதலை கிடைத்துவிடும்
அனைத்துத் தளைகளிலிருந்தும்...

மீண்டும்
நானொரு குழந்தையாய் பிறப்பேன்
உனது குடும்ப உறவுகளில் ஒருத்தியாக
உன்னைப் பார்த்தபடியே வளர்ந்திருப்பேன்

உன் மடிமீது ஏறி விளையாடுபவளாக
உன் தலைமுடியைக் கலைப்பவளாக
உன் கன்னத்தில் முத்தமிடுபவளாக

உன் அக்காவின் மகளாகவோ
உன் அத்தையின் மகளாகவோ
மீண்டும் பிறப்பேன்

இப்போது கடந்துவிடுகிறேன்
நீ விரும்பாத இந்த உடலை மட்டும்
என் ஆன்மாவை
உனக்கு பாதுகாப்பாய் விட்டு...

9
அமைதியிழந்த என் இரவினில்
மீண்டும் மீண்டும்
உள் நுழைந்து அழைக்கிறது
உன் நல்வார்த்தைகள்

கண்ணை மூடி
உறங்க முயற்சிக்கிறேன்
உனது வார்த்தைகள் சூழ்ந்து நிற்கின்றன
உனது குரல் தட்டி எழுப்புகிறது

ஒரு அழிப்பான் கொண்டு
அனைத்தையும் அழித்துவிட முனைந்தால்
என்னால் எழுதமுடியும்
மீண்டும்
உனக்கும் என்க்குமான காதலை

10
எனது நேசத்தை
துச்சமெனக் கருதச் செய்வது
என் உடலெனில் எரித்துவிடுகிறேன்

எனது அக்கறையே
உனக்கு அச்சுறுத்தலாகுமெனில்
நிறுத்திக் கொள்கிறேன்
வெளிகாட்டாமல்

எல்லாவற்றிலும்
முகமூடியைக் கழற்றிவிட்டு
நிர்வாணமாகத்தான் நிற்கிறது
என் வார்த்தைகள்
உன்னைப் போலில்லாமல்

11
என் காதுகளை மூடிக் கொள்கிறேன்
மன்னித்துக் கொள்
உன் வார்த்தைகளை
செவிமடுக்கும் நிலையில்
நானில்லை

உன் பிடிவாதத்தை
பிரதிபலிக்கும் சொற்களை
கேட்கத் தயாராக இல்லை

என்னைக் குதூகலப்படுத்திய
உன் குரலே
இன்று குத்திக் கிழிக்கவும்
நேரம் பார்த்து நிற்கிறது

ஸ்பரிசித்த குரலே
பாம்பின் தீண்டலையும்
செய்யுமெனில்?
வேண்டாம்
என் செவியினை பிணைத்துக்கொள்கிறேன்
மன்னித்துக் கொள்.

12
நாம் சந்தித்துக் கொண்டோம்
ஒரு உணவகத்தில்
உன் கண்ணிலிருந்த அன்பைப் பருகினேன்
என்னிலிருந்த தாகத்தை விழுங்கினாய்

நாம் சந்தித்துக் கொண்டோம்
ஒரு பூங்காவில்
என் கையைப் பற்றிக் கொண்டாய்
உன் கைமுடிகளை எண்ணினேன்

நாம் சந்தித்துக் கொண்டோம்
ஒரு கடற்கரையில்
உன் தோள் தொட்டு விளையாடினேன்
என் நெருக்கத்திற்குள் உறைந்தாய்

நாம் சந்தித்துக் கொண்டோம்
ஒரு பெரிய கடையில்
எனக்குத் தேவையானதை வாங்கித் தந்தாய்
என் புன்னகையிலும் ஸ்பரிசத்திலும் வசீகரித்தேன்

நாம் சந்தித்துக் கொண்டோம்
ஒரு பேருந்து நிலையத்தில்
எனக்கு கண்ணீரை பரிசளித்தாய்
உப்பாய் கரைந்து கொண்டிருந்தேன்
பின்னர்
சர்க்கரைப் படிவங்களாகினேன்

நாம் சந்தித்துக் கொண்டோம்
தினம் இரவுகளில்
மொய்த்துக் கிடக்கிறாய்
ஒரு இரவு கட்டெறும்பாய்
மறு இரவு சிற்றெறும்பாய்
கரையத் துவங்கியது காதல்
நானிப்போது உன் இரவுகளில்
மழை எறும்பாய்..

13
நேற்றை மீட்க முடிந்தால்
அல்லது
நாளையைப் பார்க்க முடிந்தால் 
இன்றில்
இவ்வளவு துயரம் இருக்காதுதானே

நேற்றைய உன் நெருக்கம்
உணர்ந்திருக்கிறேன்
நாளைய உன் உறவு
நம்பியிருக்கிறேன்
இன்றைய உன் விலகல்
தத்தளிக்கிறேன்

14
கையில் மறைத்து வைத்திருக்கும்
இனிப்பைத் தர மறுக்கும்
குழந்தையப் போலதான்
இருக்கிறது
உன் செய்கை
நான் வேண்டியும்
நீ மறைத்துச் செல்லும்
நம் காதல்

15
பூமியைவிட சிறியது உன் பிடிவாதம்
வானத்தைவிட பெரியது என் பிடிவாதம்
இருவரின் பிடிவாதமும் சிதறுகிறது
காதலின் பிடிவாதத்திற்கு முன்..

16
என்னைக் கலைத்த
முதல் மொழி
உன் புன்னகை கலந்த குரல்

17
காலியாகவோ
காலாவதியாகவோ
செய்யாது என் காதல்

18
உலகில் உள்ள
எந்த பொருளும்
திருடக் கூடியதல்ல
எல்லாம் எனக்குள் இருக்கிறது
ஒன்றை மட்டும் திருடுவேன்
நீ தர மறுக்கும் இதயத்தை

19
எதைப் பார்த்தாலும்
எதைக் கேட்டாலும்
எதை உணர்ந்தாலும்
நினைவுக்கு வந்துவிடுகிறாய்
நீ மட்டும்

20
பக்கத்து வீட்டுச் சிறுமி தந்த
ஒற்றைப் பலூனில்
காற்றை நிரப்புகிறேன்
அது உப்புகிறது
பெரிதாக் இன்னும் பெரிதாக

வெடித்துவிடுமென நிறுத்துகிறேன்
அது கையைவிட்டு பறந்து செல்கிறது

அழத்தொடங்கிய சிறுமியும்
பதறிய நானும்
பலூனைப் பார்த்தபடி நிற்க

எங்கிருந்தோ வந்து
சிறுமிக்கு ஒற்றை பலூனையும்
எனக்கு ஒற்றை முத்தத்தையும்
அளித்துப் போனாய்
சிறுமி அழுவதை நிறுத்தியிருந்தாள்
நான் இப்போது அழத் தொடங்கினேன்

21
தாங்கொணாத் துயரத்தில்
எப்போது வேண்டுமானாலும்
உன்னை அச்சுறுத்தும்
மாரடைப்பு வரலாம் எனக்கு

22
ஒரு பொழுதும்
தற்கொலை தீர்வாவதில்லை
எனச் சொல்லி
வழிந்து திணிக்கிறாய்
தற்கொலைக்கான தூண்டுதலை

23
சில நாட்களாய்
புன்னகையில்லை
பகிர்வில்லை
குறுஞ்செய்தில்லை
அழைப்பில்லை
இந்த சில நாட்கள்
நாட்களாகவேயில்லை..

24
உனக்கு பிடித்ததை நானும்
எனக்கு பிடித்ததை நீயும்
கொண்டு வரச் சொல்கிறோம்
நீ துளி நேரத்தில் முடித்துவிடுகிறாய்
நான் துளித்துளியாய் நீடிக்கிறேன்

25
உன்னில் சேமித்து வைத்திருக்கும்
காதலில்
ஒரு கவளத்தையாவது
நீ செரித்திருப்பாயெனில்
வெளித்தள்ளு
ஒரு கண்சிமிட்டலிலாவது

26
என் இரவுகள்
விழித்திருக்கின்றன
உன்னிடமிருந்து
ஒரு வரவேற்பு சொல்லை
எதிர்நோக்கி

27
நீண்ட விவாதத்தில்
நமக்கிடையே
மிச்சமிருப்பவை
என் காதலும்
உன் பிடிவாதமும்

28
மிகவும் உக்கிரமான
தகிப்புடன்
இரவுகளை எரிக்கிறது
அந்த கடுஞ்சொல்...

அதற்கு பிறகு
பலமுறை பெருமழை
பெய்த போதும்
கடுஞ்சொல்லின் அடியில்
தேங்கியிருக்கும் கதகதப்பு
மட்டும் குறையவில்லை

29
சன்னலை அடைக்கையில்
நைந்த விரலின் காயம்பற்றி
உனக்குச் சொல்ல
அழைத்தேன்
நீ தூங்கியெழுந்திருப்பாய்
எனும் உத்தேசத்துடன்
அழைப்பு முழுதாய் சென்று
நின்றுவிட்டது
தவறவிட்ட அழைப்பாகவும்
உணர்த்த முயலும் தத்தளிப்பாகவும்

30
எந்தவித
நிரூபித்தலுக்கும் இடமின்றி
ஒளிந்து கொண்டது
உனது நீ

எல்லாவித
தாக்குதலிலிருந்தும்
தப்பி நிற்கிறது
எனது நான்

31
உன்னிடம்
ததும்பும் புன்னகையை
மறக்காமல் எடுத்து வா
எனக்கு
நீ தந்த காயங்களை
உறையிலிட்டு வருகிறேன்
ஏதாவதொரு
சமரசத்தின் புள்ளியில்
சந்தித்தாக வேண்டும் நாம்


32.
பால் போன்ற
நேசத்தில்
துளி காதலை
உறை ஊற்றினாய்
முழுவதும் உறைந்துவிட்டது
என் நேசம்..


33
சில முயற்சிகளுக்குப் பின்
அலுத்துத் திரும்பும்
என் கனவுகளைத் தேற்றுகிறேன்
விடியும் தூரம் தொலைவில்
இல்லை எனவும்
நம்பிக்கையின் வேர்களில்
ஈரப்பதம் மிச்சமிருக்கிறதெனவும்


34
சலனமின்றி
இருவராலும்
நாட்களை நகர்த்த முடியுமெனில்
நம்மிடமிருப்பது
காதலில்லை
அதே வேளையில்
நட்புமில்லை


35
ஏதோ ஒன்றிற்காகவோ
எதற்காகவோ
என் நினைவு
உன்னைத் தீண்டிக் கொண்டிருந்தால்
நம்பு
நமக்கிடையேயிருப்பது காதலென...

36
உன் மறுத்துரைப்பாலும்
என் மாற்றிக் கொள்ளாத் தன்மையாலும்
அந்நியமாகி நிற்கிறது
நமது அன்யோன்யம்


37
காலத்தைப் போல
முடிவற்றது
என் காதல்

38
கூர்தீட்டப்பட்ட
நமது நேசம்
சில நாட்களாய்
புழங்காமல் கிடக்கிறது
சானை பிடிக்க வேண்டும்
துருப்பிடிக்கத் துவங்கும் முன்

39
தப்பிச் செல்வதற்கு
போதுமானதாயிருக்கும்
இடைவெளியை
இட்டு நிரப்புகிறேன்
தொடரும் நினைவுகளாலும்
படரும் காதலாலும்

40
சாகசமாயும்
சாமர்த்தியமாயும்
நிகழ்த்திவிடுகிறாய்
என் மீதொரு வன்முறையை

பாசாங்கற்று ஏற்றுக்
கொள்வதைத் தவிர
வேறெந்த புனைவுகளையும்
அறிந்திருக்கவில்லை
ஒப்பீடற்ற என் நேசம்


41
நமக்கிடையேயான
இடைவெளி
அதிகமாகும் போது
அதில் உணரப்படும்
காயங்களும்
கண்ணீருமே
மீண்டும்
நம்மை பிணைத்து வைக்கும்
பாசாங்கற்ற மஞ்சள் வெளியில்

42
இரண்டு முறை
திரும்பிப் பார்த்தாலே
மூன்றாம் முறை எதிர்பார்ப்போம்
இரண்டு வருடம்
விரும்பி பேசிவிட்டு
மூன்றாம் வருடம்
முரன்டு பிடிக்கிறாயே
எவ்வகையில் நியாயம்?

43
என் சாவிற்காக அரண்டு
ஒத்துக் கொள்ளாதே
என் காதலுக்காக மிரண்டு
ஏற்றுக் கொள்ளாதே
என் சாவை விட
என் காதல்
உன்னை அணுஅணுவாய் கொல்லும்

44
ஆசை 60 நாளில்
முடியலாம்
மோகம் 30 நாளில்
முடியலாம்
என் காதல் முடியாது
என் ஆயுளுக்குப் பின்னும்

45
சர்க்கரை வியாதி
வந்த என் தாத்தாவுக்கு
காலை எடுத்துவிட்டோம்

காதல் வியாதி
வந்த எனக்கு
இதயத்தை அகற்றித்தான்
ஆகணுமோ?



No comments:

Post a Comment