Friday, January 21, 2011

அமைதியுறும் வரை - 6

15
அந்த உணவகத்தில் 
என் கனவுகள் பற்றி கேட்டபோதே 
உன் கைகளைப் பற்றிக் கொண்டு 
ஏறிட்டேன் 
சிறு புன்னகை செய்தாய்.. 

பின் தொடர்ந்தேன் 
உன் வீடு வந்ததும் 
ஒவ்வொருவிரலாய் 
விடுவித்தாய் 
என் அனுமதியின்றியே 

என் கண்களில் துளிர்க்கும் 
கண்ணீர்த்துளி 
உருண்டு தரை தொடவும் 
நீயுன் கதவைத் தாளிடவும்
சியாக இருந்தது 
இரண்டின் அதிர்வும் 
===================
16
கோழையென சாகத்துணிய மாட்டேன் 
என் காதல் 
புறமுதுகிடாது.. 
வீரங்கொண்டு சாகடிக்கவும் மாட்டேன் 
என் காதல் 
கொலை நிகழ்த்தாது.. 
இரண்டுமாயும் இருக்கும் 
இரண்டுமற்றும் இயங்கும்.. 
=====================
17
எழுதுவேன் 
தொடர்ந்து எழுதுவேன்..
உன் மனம் சலனமுறும்  வரை.. 
என மனம் அமைதியுறும் வரை..
==============================
18
என் செவியினுள் 
பல உணர்ச்சிகளின் 
கதுப்புகளை 
உருவாக்குகிறது 
உன் குரல்.. 

ஒரு சமயம் மென்மையாகவும் 
ஒரு சமயம் வன்மமாகவும் 
ஊடுருவுகிறது அது..

ஒரு இரவு தகிப்பதும் தத்தளிப்பதுமாக 
மறு இரவு தாலாட்டுவதும் தலைகோதுவதுமாக
மாறுகிறதுன் குரல்.. 
===================
19
அமைதியிழந்த என் இரவுகளை 
ஆற்றுபடுத்தும் வழி 
நீ மட்டுமே அறிந்தது.. 
ஆதலால் வந்துவிடு அன்பே 
என் இரவுகளை உயிர்ப்பிக்க...
===========================
20
உன்னிடம் 
என் தோல்வியை 
ஒப்புக் கொள்கிறேன் 
என்னால்
உன்னை மறக்க முடியவில்லை 
முழந்தாளிட்டழும்
காதலைத் 
தோள் தொட்டு தூக்கி நிறுத்து 
===========================
21
நீ உருவாக்கிய 
சமன்பாடுகளை 
நீயேதான் தகர்க்கக் கூடும் 

என் காதலின் பெருக்கையும் 
அதில் என் நொடிகள் கழிவதையும் 
என் துயரம் கூடுவதையும் 
என் நாட்கள் வகுக்கப்படுவதையும் 
நீயறிவாய் அன்பே 

நீ உள்ளிருத்தியிருக்கும் 
சமன்பாடுகளை அழித்துவிட்டு 
உருவாக்கு 
புதிய சமன்பாடுகளை 
என் வாழ்தலுக்கேனும்.. 

===================

No comments:

Post a Comment